இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம்.

சிஎம்எஸ் ஸின் செயலராக சென்னையில் பணியாற்றிய ஐயர் கனம் ஜான்தக்கர் அவர்களின் சகோதரி தான் சாராள் தக்கர். ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து விட்டு பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். வேற்று ஆண்களை பார்த்தால்கூட வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்கிறார்கள் என்று எழுதின கடிதம், இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி, மாற்று திறனாளியான பதினாலு வயது சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த சமுதாயத்தில் பெண்கள் கல்விக்காக உதவிகள் தேவை என்பதை கனம் ஜான் தக்கர் ஐயர் அவர்கள் தனதுசகோதரிக்கு எழுதி அடிக்கடி தெரிவித்ததால் இருகால்களும் ஊனமுற்ற நிலையில் இருந்தாலும் பெண்கல்விக்காக தன்னை அர்பணித்தாள் சாராள் தக்கர். கடிதத்தை படித்தவுடன் சாராள் தக்கர் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதுமட்டுமல்ல 1895ல் சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. இன்று அநேக பள்ளிகள் ஆலமரம் போல் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு முறையும் தனது கால்கள் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் ஒரு நல்ல பணத்தொகையை சேர்த்து அனுப்பினார்.

1857ம் வருஷம் சாராள் தக்கர் என்னும் தன்னலமற்ற கிறிஸ்துவின் கோதுமை மணி பூமியில் விதைக்கப்பட்டு தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது. அதனால் தேவப்பணி தடைபடவில்லை. ஏனெனில் சாராள் தக்கர் அம்மையாரின் பணிகளை செய்து முடிக்க தேவன் அம்மையாரின் தோழிகளை எழுப்பினார். மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் போன்றவர்கள் முயற்சியினால் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளி 1858ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததும் இல்லை.

தேவ பிள்ளையே …. உடல் ஊனமுற்ற இந்த சகோதரியே நிச்சயமான ஓட்டத்தை ஓடியிருக்கும்போது நீங்களும் நானும் எப்படி சும்மா இருக்க முடியும்?
இந்த கல்வி நிறுவனத்தின் பொன்மொழி (motto) போல *”எனவே நீங்கள் அழிவில்லாத கிரீடம் பெறக்கூடிய விதத்தில் இயங்கவும்” கர்த்தர் கிருபை செய்வாராக!