காட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம் எப்பொழுதும் செழிப்பாக இருந்தது. ஆனாலும் அங்கே ஒரு பெரிய பிரச்சனையும் இருந்தது. அவர்களை வாழ வைத்த காட்டில் ஒரு வகை மரம் இருந்தது. அதன் கனி அழகானது. பலமான அதன் வாசனை அதை உண்ணத் தூண்டும். ஆனால் தப்பித்தவறி அதை உண்டு விட்டால் அவ்வளவுதான். உண்டவர்கள் பத்து நாட்கள் வரை தன்னை மறந்து வெறி பிடித்து அலைவார்கள். கண்ணில்படும் எவரையும் தாக்குவார்கள். கொடூரமாய்ப் பசிக்கும். எது கிடைத்தாலும் தின்பார்கள். பெரும்பாலும் பத்து நாட்களில் பசியில் மடிவார்கள். ஒரு வேளை புத்தி தெளிந்தாலும், அந்த கனியின் ஆசை மீண்டும் அதைப் புசிக்க வைத்து விடும். இதனாலேயே அங்கே ஒரு வழக்கம் இருந்தது. பழத்தை உண்ட வெறியோடு யாராவது கண்ணில் பட்டுவிட்டால் அவனைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஏனென்றால் அவன் திருந்த வாய்ப்பே இல்லை என்பதுடன் அவனால் பிறருக்கு ஆபத்தும் நேரிடும். வருடத்தில் ஒருவரேனும் இப்படிக் கல்லெறியப்பட்டு சாவது வழக்கமாகிப் போனது.

அந்த கிராமத்தில் அன்பான ஒரு தகப்பன் இருந்தார். அவர் தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார். அவனிடம் அந்த மரத்தின் தீமைகளைப் பற்றிச் சொல்லி இருந்தார். அவனும் எச்சரிக்கையாகவே இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்குள் தேனெடுக்கச் சென்ற போது அவன் கொண்டு சென்றிருந்த கஞ்சிக் கலயம் தவறுதலாகக் கீழே விழுந்து உடைந்தது. அன்றைக்கென்று சோதனையாய் தேன் கூடு எதுவுமே கண்ணில் படவில்லை. பசி குடலைத் தின்றது. வீடு திரும்பிச் செல்வதென்றால் சில மணி நேரங்களாகும். பசி மயக்கத்தில் விஷக்கனியின் வாசனை மூக்கைத் துளைத்தது .ஒரு யோசனை தோன்றியது. தின்றால்தானே பிரச்சனை? முகர்ந்தால் கொஞ்சம் பசி அடங்குமே. முகர்ந்தபடியே ஊர் போய் சேர்ந்து விடலாம் என்ற முடிவுடன் மரத்தருகே வந்து கீழே கிடந்த ஒரு கனியைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் யோசனை சரிதான். பழத்தை முகர்ந்தவுடனே பசி குறைந்தது. வேகமாய் வீடு நோக்கி நடந்தான். பழத்தின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாய் அவனை வெறி கொள்ள வைத்தது. சிறிது நேரத்தில் தன்னை மறந்தான். தின்று விட்டான். மிருகம் கத்தியபடி ஊருக்குள் ஓடினான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கப் பாய்ந்தான். செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் கல்லோடு கூடி வந்தார்கள். இல்லையென்றால் அவர்களுக்கல்லவா ஆபத்து? செய்தி அறிந்த தந்தை கதறி ஓடி வந்தார். ஊர்த் தலைவரிடம் அழுது, கெஞ்சி மகனால் யாருக்கும் ஆபத்து வராது என்று வாக்களித்தார். ஏற்கனவே மகன் இரண்டு மூன்று கற்களால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடந்தான். ஊர்த்தலைவர் சொன்னார், “ஜாக்கிரதை. அவன் உங்களையே கொல்லலாம். அது மட்டுமில்லாம மறுபடியும் பழத்தை தின்னாம அவனால இருக்கவே முடியாது”. தந்தையின் நல்ல பெயரால், அந்த ஊரில் முதல் முதலாய் அவன் கல்லடிக்குத் தப்பினான்.

பத்து நாட்கள் ஓடின. மகன் வெறி தெளிந்து எழுந்தான். பழத்தைத் தின்றது நினைவுக்கு வந்தது. தான் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை. மகன் தெளிவாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்பா ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார். மகன் அழுதபடி கேட்டான் “ஏம்ப்பா இப்படி இளைச்சுட்டீங்க? அப்பா “நான் பத்து நாளா சரியா சாப்பிடலப்பா” “ஏம்ப்பா கண்ணெல்லாம் இப்படி வீங்கிக் கிடக்குது” “தூங்கவே இல்லை. அதோட தொடர்ந்து அழுதுட்டே இருந்தேன்” திடீரென்று பதறிக் கேட்டான்” என்னப்பா கையில காயம்?” “அது உனக்கு சாப்பாடு ஊட்டும் போது நீ கடிச்சது. உனக்கு அப்பல்லாம் ரொம்ப பசிக்குமே , “கழுத்தில இருக்கிற காயம்?” “தரைல தூங்கறியேன்னு தூக்கி மெத்தைல படுக்க வச்சேன். அப்ப நீ கடிச்சது”. மகன் கதறி அழுதான். எனக்காக இவ்வளவு பாடுபட்டீங்களே அப்பா! எல்லாரையும் போல சாக விட்டிருந்தா இந்தப் பாடுகள் உங்களுக்கு வந்திருக்குமா? ” அப்பா சிரித்தபடி சொன்னார், ” நீ புத்தி தெளிந்து அழுவதைப் பார்த்ததும் என் காயத்தின் வலியெல்லாம் மறைஞ்சே போச்சுடா!” ஒரு வாரம் கழித்து மகன் மீண்டும் காட்டுக்குப் போனான். பழத்தின் நினைவு வந்து கை கால் நடுங்கியது. சகலமும் மறந்து பழத்தைக் கையிலெடுத்தான். கடிக்கப் போன வேளையில் நினைவுக்கு வந்தது அவனுக்காக அப்பா பட்ட காயங்கள். “இல்லப்பா! இனிமே நீங்க என்னால காயப்பட விடமாட்டேன்”. பழத்தைத் தூக்கி வீசி வீடு திரும்பினான்.

பிசாசு பாவ இச்சையைக் கொண்டு வர முயன்றால் நாம் அவரது காயங்களை நினைத்துபார்க்கவேண்டும். நமக்காக அவர் சிந்திய இரத்தத்தை நினைத்து பார்க்கவேண்டும். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது,
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53 :5
நம்மை குணமாக்கி விடுவித்த நம் இயேசுவுக்கு சாட்சியாக வாழுவோம்..

Leave a Comment